புகலிடம் கோருவோரை பாரிஸ் நகரில் இருந்து வெளியேற்றும் திட்டம்: கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான வீடற்ற மக்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை பாரிஸ் நகரில் இருந்து வெளியேற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தற்காலிக வரவேற்பு மையங்கள்
உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல தங்கள் கவலையை இந்த விவகாரத்தில் பதிவு செய்துள்ளனர். மார்ச் மாத மத்தியில் இருந்தே அரசாங்கத்தின் இந்த முடிவு தொடர்பில் AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது.
அதாவது, வடக்கு மற்றும் கோர்சிகாவைத் தவிர ஒவ்வொரு பிரெஞ்சு பிராந்தியத்திலும் தற்காலிக வரவேற்பு மையங்களை உருவாக்குமாறு உள்ளூர் அரசியற் தலைவர்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
@getty
மேலும், வீட்டு வசதி அமைச்சர் Olivier Klein நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், பல ஹொட்டல்கள் இந்த இலையுதிர்காலத்தில் வீடற்ற மக்கள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்களை அனுமதிக்க விரும்பவில்லை எனவும், ரக்பி உலகக் கிண்ணம் போட்டிகள் முன்னெடுக்கப்படும்போது வாடிக்கையாளர்களின் வருகையை அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதே நிலை தான் ஒலிம்பிக் போட்டிகள் வேளையிலும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலும் கூறுகின்றனர். இதனிடையே, தன்னிச்சையாக பாரிஸ் நகரில் இருந்து வெளியேறும் வீடற்ற மக்களுக்கு, அருகாமை பகுதிகளில் 3 வாரங்களுக்கு குடியிருக்கும் வசதி செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸிலிருந்து துரத்துவது என்ற கேள்விக்கு இடமே இல்லை
அதற்கான கட்டணங்களை அரசாங்கமே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18,000 மக்கள் வசிக்கும் Bruz பகுதியும் இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 3 வாரத்திற்கு 50 பேர்களை அனுமதிக்க இங்குள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo தெரிவிக்கையில், பாரிஸிலிருந்து யாரையும் துரத்துவது என்ற கேள்விக்கு இடமே இல்லை. யாரும் வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்லது வீடற்றவர்கள் பாரிஸ் நகரில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்படுவதும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒரு திட்டத்துடன் செயலில் இறங்குவது, வேறு சிக்கல்களை ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் பாரிஸ் நகரில் இருந்து மக்களை கூட்டமாக வெளியேற்றுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என நகர்ப்புற திட்டமிடலுக்குப் பொறுப்பான பாரிஸின் துணை மேயர் Emmanuel Grégoire தெரிவித்துள்ளார்.