மொத்த பயணிகளும் கொல்லப்பட்ட விமான விபத்து: சிறுவன் மட்டும் தப்பிய அதிசயம்
லிபியாவின் திரிபோலி விமான நிலையம் அருகே பெரும் விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்த பயணிகளும் கொல்லப்பட, ஒரே ஒரு சிறுவன் மட்டுமே அதிசயமாக உயிர் தப்பியுள்ளான்.
உலக நாடுகளை உலுக்கிய குறித்த விமான விபத்தில் பிரித்தானியர்கள் இருவர் உட்பட 103 பயணிகள் சம்பவயிடத்தில் இருந்து சடலமான மீட்கப்பட்டனர்.
ஆனால், ஹாலந்து நாட்டவரான 9 வயது Ruben van Assouw என்ற சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளான். விமானம் வெடித்து சிதறியபோது, இரண்டாக உடைந்த அந்த விமானத்திலிருந்து குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டார்.
அதே விமானத்தில் பயணித்த சிறுவனின் பெற்றோர் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில், உயிர் தப்பிய குறித்த சிறுவன், அதுவரையான விமான விபத்துகளில் அதிசயமாக உயிர் தப்பிய 14வது நபர் என கூறப்படுகிறது.
சிறுவன் மீட்கப்படும்போது மிக மோசமான நிலையில் காயம்பட்டிருந்தான். அவனது கால் எலும்பு பல துண்டாக உடைந்திருந்தது. அவனால் உடலை அசைக்கவே முடியாதபடி காயம்பட்டிருந்தான். மட்டுமின்றி, அவனது மூளையில் காயம்பட்டிருக்கலாம் எனவும் அப்போது அஞ்சப்பட்டது.
மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த சிறுவனை மீட்டு, எந்த நாட்டவர் என வினவியபோது, ஹாலந்து நாட்டவர் என முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. குறித்த விபத்தில் பிரித்தானிய பயணிகள் இருவர் மற்றும் அயர்லாந்து நாட்டவர் ஒருவர் என கொல்லப்பட்டதாக உறுதி செய்திருந்தனர்.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருந்து லிபியாவின் திரிபோலி நகருக்கு பயணித்த விமானமே, விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கியது.
மேலும், திரிபோலி விமான நிலையத்தை நெருங்கும் போது கோளாறு தொடர்பில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை விமானி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.