நடுவானில் திடீரென்று மாயமான விமானம்... தேடுதல் நடவடிக்கை தீவிரம்
பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமானதை அடுத்து, விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மேனிய நாட்டவர்கள்
விக்டோரியா மாகாணத்தின் லியோங்காதா வழியாக நியூ சவுத் வேல்ஸின் காண்டோபோலின் பகுதியில் அமைந்துள்ள ஹில்ஸ்டன் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த இலகுரக விமானம், 70 வயதுடைய ஒரு விமானியும், 60 வயதுடைய ஒரு பெண் பயணியையும் ஏற்றிச் சென்றது.
இந்த ஜோடி இருவரும் டாஸ்மேனிய நாட்டவர்கள் என்றும் நண்பர்களைப் பார்க்க இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் AMSA அதிகாரிகள் தெரிவிக்கையில், டாஸ்மேனியா அருகே அந்த ஜோடியைத் தேடுவதை ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் டாஸ்மேனியாவின் ஜார்ஜ் டவுனில் இருந்து புறப்பட்ட விமானம் மத்திய மேற்கு நியூ சவுத் வேல்ஸில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு தரையிறங்கத் தவறியதை அடுத்து கவலை எழுந்தது என்றே செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விமானம் காணாமல் போவதற்கு முன்பு ரேடியோ தொடர்பை ஏற்படுத்தவில்லை அல்லது மேடே எச்சரிக்கையை வெளியிடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உயிருடன் கண்டுபிடிப்போம்
அந்த விமானி மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றே டாஸ்மேனியா காவல்துறை ஆய்வாளர் நிக் கிளார்க் தெரிவிக்கிறார். ஆனால், அவர் பயணித்த அந்த விமானமானது அவருக்கு ஒப்பீட்டளவில் புதியது என்றே நிக் கிளார்க் ஞாயிறன்று தெரிவித்துள்ளார்.
விமானத்தின் தற்போதைய உரிமையாளரும் விமானியும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தை வாங்கியுள்ளனர். மேலும் நீர்நிலைகள் மீது தேடுவது என்பது கடினமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அந்த இருவரையும் உயிருடன் கண்டுபிடிப்போம் என்று நம்புவதாகவும், அதுதான் தேடலின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா மற்றும் டாஸ்மேனிய காவல்துறையினர் பாஸ் நீரிணை மற்றும் தெற்கு விக்டோரியாவில் தங்கள் தேடலை மையப்படுத்தியுள்ளனர். இதனிடையே, காணாமல் போன விமானத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து தேடுதலுக்கு உதவுமாறு காவல்துறை ஆய்வாளர் கிளார்க் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
தண்ணீரில் யாராவது இருப்பதைக் கண்டால், அது பாதுகாப்பானது என்றால், தயவுசெய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வலியுறுத்துவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |