சாப்பிட காசில்லாமல் பசியுடன் உறக்கம் - ஏழ்மையிலும் ஐபிஎல் ஏலத்தில் சாதித்த 5 வீரர்கள்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், நேற்று முன்தினம் அபுதாபியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 77 இடங்களை நிரப்புவதற்காக, 10 ஐபிஎல் அணிகள் ரூ.215.45 கோடியை செலவு செய்துள்ளன.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், பலரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடர், ஏழ்மை பின்னணியில் இருந்து வரும் திறமையாளர்களையும் அடையாளம் கண்டு மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கார்த்திக் சர்மா
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.14.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள கார்த்திக் சர்மாவும்(kartik sharma) ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார்.

ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சொந்த ஊரான பரத்பூருக்கு சென்ற போது அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தில் சாதாரண வாழ்க்கையை நடத்தும் கார்த்திக்கின் தந்தை மனோஜ் சர்மா, தனது மகனின் வெற்றிக்குப் பின்னால் இருந்த கஷ்டங்களை நினைவு கூர்ந்தார்.
"நானும் எனது மனைவி ராதாவும், எவ்வளவு செலவானாலும் கார்த்திக்கை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றுவது என கனவு கண்டோம்.
அவனின் பயிற்சி மற்றும் விளையாட்டு செலவுக்காக பஹ்னேரா கிராமத்தில் உள்ள தங்கள் நிலங்களையும், விவசாய நிலங்களையும் விற்றோம். கார்த்திக்கின் தாய் அவருடைய தங்க நகைகளை விற்றார்.

ஒரு முறை குவாலியரில் நடந்த ஒரு தொடரின் போது4 அல்லது 5 போட்டிகளுக்குள் கார்த்திக் விளையாடிய அணி வெளியேற்றப்படும் என்று நினைத்து அவருடன் சென்றேன். ஆனால் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டம் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றது.
மேலும் பணம் இல்லாததால், நானும் கார்த்திக்கும் ஒரு இரவு தங்குமிடத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாப்பிட காசில்லாமல் பசியுடன் தூங்க வேண்டிய நிலை இருந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற பரிசுத்தொகையை வைத்து நாங்கள் வீடு திரும்ப முடிந்தது." என கூறினார்.
மங்கேஷ் யாதவ்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இடது மங்கேஷ் யாதவை(mangesh yadav) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 5.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

மங்கேஷ் யாதவின் தந்தை ராம் அவத் யாதவ் ஒரு லாரி ஓட்டுநர் ஆவார். மங்கேஷின் பெற்றோர் மற்றும் 3 சகோதரிகள் உட்பட 6 பேர் கொண்ட குடும்பம், போர்கானில் 10x10 அடி வாடகை அறையில் வசித்து வருகிறது.
மங்கேஷ் யாதவ்வின் கிரிக்கெட் உபகரணங்கள், பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான பயணத்திற்காக அடிக்கடி பணம் கடன் வாங்கியுள்ளார்.
விஷால் நிஷாத்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளரான விஷால் நிஷாத்தை(vishal nishad ), பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

விஷாலின் தந்தை உமேஷ் நிஷாத் ஒரு கொத்தனார் ஆவார். நிதி நெருக்கடி காரணமாக விஷாலும், தந்தைக்கு உதவியாக பல நாட்களில் வேலைக்கு சென்றுள்ளார்.
விஷால் நிஷாத் ஏலத்தில் வாங்கப்பட்டதும் அவரது குடும்பம் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளது.

விஷாலின் திறமையை கண்ட அவரது பயிற்சியாளர் கல்யாண் சிங் அவருக்கு இலவசமாக பயிற்சியளித்து ஆதரவளித்துள்ளார்.
சாகிப் ஹுசைன்
பீகாரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சாகிப் உசேனை(sakib hussain), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

சாகிப்பின் தந்தை அலி அகமது உசேன் சவுதி அரேபியாவில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றினார். தற்போது அவருடைய கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
சாகிப் உசேன் ரஞ்சி டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது விளையாடுவதற்கு அவரிடம் காலணிகள் கூட இல்லை. கிழிந்த காலணிகளுடன் போட்டிகளில் விளையாடினார்.
ஆகிப் நபி தர்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தர், டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஆகிப்பின் தந்தை குலாம் நபி தார் ஒரு அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர். தன் மகன் படித்து மருத்துவராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
தெருக்களில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆகிப் நபிக்கு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என்று பிரத்யேகமான 'ஸ்பைக்ஸ்' காலணிகள் தேவை என்பது கூட தெரியாது.
காஷ்மீர் கிரிக்கெட் சங்க தேர்வுக்கு சாதாரண ஸ்போர்ட்ஸ் ஷூ உடன் சென்ற அவர், அங்கு சக வீரரிடம் ஸ்பைக்ஸ் காலணியை இரவல் வாங்கியே கலந்து கொண்டார்.
ஐபிஎல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பாரமுல்லாவில் ஒரு கிரிக்கெட் அகாடமி ஆரம்பிக்க வேண்டும் என ஆகிப் நபி தெரிவித்துள்ளார் .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |