ஐநா தூதுவரை கொல்ல திட்டம்: சிக்கிய இளைஞர்கள்
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான மியான்மர் நாட்டின் தூதுவரை கொல்ல சதி வேலையில் ஈடுபட்ட இருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் மியான்மர் நாட்டவர்கள் என்றே தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கைதான இருவரும் ஜனநாயக சார்பு தூதுவரான கியாவ் மோ துனை பதவி விலக கட்டாயப்படுத்த திட்டமிட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொல்லவும் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைதான இருவரும் 28 மற்றும் 20 வயதுடைய மியான்மர் நாட்டவர்கள் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னரே தகவல் கசிந்துள்ளதாகவும், இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் இளைஞர்களின் சதி வேலையை முறியடித்துள்ளனர்.
கைதாகி விசாரணை எதிர்கொள்ளும் இரு இளைஞர்களும் தலா 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை அனுபவிக்க நேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கிய இரண்டு பேரும் மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சியில் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், சதித்திட்டத்தினூடே கடந்த பிப்ரவரியில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், ராணுவத்தின் தலையீடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மியான்மருக்கான தூதுவர் Kyaw Moe Tun கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.