ஐரோப்பிய நாடொன்றில் ஈரானியக் கல்வியாளரைக் கொல்ல சதி: சிக்கிய இளைஞர்
தெற்கு ஸ்வீடனில் ஈரானிய ஆராய்ச்சியாளர் ஒருவரை படுகொலை செய்யும் பொருட்டு, கத்தியுடன் அவரது குடியிருப்புக்கு சென்ற ஒரு பதின்ம வயதினருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சதித்திட்டம் தீட்டியதாக
வியாழக்கிழமை வெளியாகியுள்ள தீர்ப்பில் இளங்குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கல்வியாளரான அர்வின் கோஷ்னூத்தைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, அந்த இளைஞருடன் மேலும் இருவரும் விசாரணையின் முடிவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரானிய அரசாங்கமே இருப்பதாக அர்வின் கோஷ்னூத் தொடர்ந்து கூறிவந்துள்ளார். கோஷ்னூதைக் கொலை செய்வதற்குப் பணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு, அந்த இளைஞர், மற்ற இருவரால் குறுஞ்செய்திச் செயலி வாயிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மால்மோ நகரில் உள்ள கோஷ்னூத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு கோஷ்னூத்தின் மனைவி பதிலளித்துள்ளார்.
கொலை செய்யும் நோக்கத்துடன்
சந்தேகத்தின் அடிப்படையில் கோஷ்னூத் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பிய அவர், அதன் பின்னர் இன்னொரு குடியிருப்பில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உத்தவல்லா நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில், அந்த இளைஞர் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதத்துடன் ஆய்வாளரின் குடியிருப்புக்கு சென்றார் என்பது நிறுவப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது என குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொலை முயற்சி குற்றச்சாட்டைச் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கண்டறிந்த நீதிமன்றம், அக்குற்றத்தை கொலை செய்வதற்கான ஆயத்தச் செயல்கள் என மறுவகைப்படுத்தியது.
இதனையடுத்து முக்கியக் குற்றவாளிக்குச் சிறார் சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |