மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும்.., பாஜகவில் இணைந்த ராமதாஸை கடுமையாக பேசிய காடுவெட்டி குரு மகள்
மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றால் பாஜகவில் தந்தையும் மகனும் இணைந்து கொள்ள வேண்டியது தானே, ஏன் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ஆவேசமாக பேசியுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாஜகவுடன் பாமக இணைந்ததை வன்னியர் சங்க தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் பேசியது..
இது தொடர்பாக செந்தியாளர்கள் சந்திப்பில் அவர், "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மற்றும் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு பாஜகவுடன் இணைந்துள்ளது என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று சொல்லும் அண்ணாமலையுடன் கூட்டணி வைப்பதில் வன்னிய மக்களுக்கு என்ன பயன் உள்ளது.
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும், மகனும் பாஜகவில் இணைய வேண்டியது தானே, ஏன் பின்னாடி வன்னிய சமூகம் உள்ளது என்று வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
சமூக நீதி, இட ஒதுக்கீடுக்காக பாமக குரல் கொடுத்து வந்தது. ஆனால், இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அன்புமணியின் சுயநலம். தற்போது, வன்னியர் சமூகம் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எதன் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள் என்பதை தெரிவிக்கவில்லை. வன்னியர் சமூக மக்களுக்கு நலம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இருந்து பாமக கூட்டணியை அகற்றுவேன்" என்றார்.