தவெக அலுவலகம் சென்ற பாமக - கூட்டணி பேச்சுவார்த்தையா?
தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், பாமக வழக்கறிஞர் பாலு தவெக தலைமை அலுவலகத்திகு வருகை தந்துள்ளார்.
தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், அருண்ராஜ், சி.டி.ஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று, வரும் கட்சிகளை கூட்டணிக்கு அரவணைப்போம், கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு, தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு அமைத்தல், எதிரிகளின் அவதூறுகளை முறியடித்து வலிமையான பரப்புரை மேற்கொள்தல் என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அழைப்பு விடுத்துள்ள பாமக
இந்நிலையில், பாமக நிர்வாகிகள் தவெக தலைமை அலுவலகம் வந்துள்ள புகைப்படங்கள் வெளியான நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாமக சார்பில், வரும் டிசம்பர் 17 ஆம் திகதி சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திமுக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதே போல், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்ப விடுத்துள்ள கடிதத்தை அன்புமணி ராமதாஸ் சார்பில், பாமக வழக்கறிஞர் பாலு தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து வழங்கினார். தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இது குறித்து பேசிய வழக்கறிஞர் பாலு, தெலங்கானா, பீகார், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கபடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
அதனை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட முதல் மாநாட்டில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து தவெக பேசி வருகிறது.

திமுக தவிர்த்து அதன் கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம், இது கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது. யாருடன் கூட்டணி என்பதை தலைவர்கள் முடிவெடுப்பார்கள். இது அதற்கான தருணம் அல்ல" என கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நல்ல விசயம். ஒரு நல்ல விசயத்திற்காக பாமக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தை தவெக பெற்றுக் கொண்டுள்ளது. நிச்சயம் தலைவரிடம் இது குறித்து ஆலோசித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |