உக்ரைனிலிருந்து உணவு இறக்குமதியை தடை செய்யும் ஐரோப்பிய நாடுகள்!
போலந்து, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் உணவு இறக்குமதியை தடை செய்துள்ளன.
உள்ளூர் விவசாயத் துறையைப் பாதுகாக்க, அண்டை நாடான உக்ரைனிலிருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய போலந்தும் ஹங்கேரியும் முடிவு செய்துள்ளன என்று இரு அரசாங்கங்களும் சனிக்கிழமை தெரிவித்தன.
இதையடுத்து, போலந்து நாட்டின் முடிவு குறித்து உக்ரைன் வருத்தம் தெரிவித்தது. "ஒருதலைப்பட்சமான கடுமையான நடவடிக்கைகளால் பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது நிலைமையின் நேர்மறையான தீர்வை விரைவுபடுத்தாது" என்று உக்ரைன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த முடிவு?
AP
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சில கருங்கடல் துறைமுகங்களை இயங்கவிடாமல் தடுத்தது. இதையடுத்து, தளவாடத் தடைகளால் மலிவாக இருக்கும் பாரிய அளவிலான உக்ரேனிய தானியங்கள் மத்திய ஐரோப்பிய நாடுகளிலேயே தங்கிவிட்டன. இதனால், உள்ளூர் விவசாயிகளுக்கு விலை மற்றும் விற்பனையில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.
கடந்த மாதம் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஐந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எழுதிய கடிதத்தில், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், முட்டை, கோழி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் இதற்கு முன்ப இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் உக்ரேனிய விவசாய இறக்குமதிகள் மீதான வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதிகப்படியான விநியோகத்தின் தாக்கம் போலந்தின் ஆளும் சட்டம் மற்றும் நீதிக் கட்சிக்கு (PiS) ஒரு தேர்தல் ஆண்டில் ஒரு அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது, மேலும் போலந்து பொருளாதாரம் தேக்கநிலையில் சிக்கியுள்ளது.
AP
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்
உக்ரைனின் விவசாயக் கொள்கை மற்றும் உணவு அமைச்சகம் போலந்து தடையானது ஏற்றுமதியில் இருக்கும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு முரணானது என்றும், பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும் கூறியது.
"போலந்து விவசாயிகள் கடினமான சூழ்நிலையில் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் உக்ரேனிய விவசாயிகள் இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹங்கேரியும் இணைந்தது
பின்னர் சனிக்கிழமையன்று தற்போதைய நிலை உள்ளூர் விவசாயிகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறி, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஓர்பனின் அரசாங்கமும் இந்தத் தடையில் இணைந்தது..தானியங்கள் மற்றும் பிற உணவு இறக்குமதிகள் மீதான தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய விவரங்களை ஹங்கேரி தெரிவிக்கவில்லை, ஆனால் ஜூன் மாத இறுதியில் அது காலாவதியாகும் என்று கூறியது.
போலந்து பிரதமர் கூறியது என்ன?
போலந்தின் காசின்ஸ்கி கூறினார்: "நாங்கள் உக்ரைனின் நண்பர்களாகவும் நட்பு நாடுகளாகவும் இருக்கிறோம். நாங்கள் அதனை ஆதரிப்போம், நாங்கள் அதனை ஆதரிப்போம்... ஆனால், அதன் குடிமக்கள் நலன்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு அதிகாரத்தின், நல்ல அதிகாரத்தின் கடமையாகும்." என்று கூறினார்.
தானியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க போலந்து தயாராக இருப்பதாக கசின்ஸ்கி கூறினார்.