பொய்யான வெடிகுண்டு எச்சரிக்கை... திருப்பிவிடப்பட்ட விமானம்: சிக்கலில் புடினின் நட்பு நாடு
சட்டவிரோதமாக பயணிகள் விமானம் ஒன்றை திசை திருப்பிவிட்டதாக குறிப்பிட்டு மூன்று பெலாரஸ் அதிகாரிகளை கைது செய்ய போலந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலியான வெடிகுண்டு மிரட்டல்
அரசாங்க எதிர்ப்பு பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்யும் பொருட்டே கடந்த 2021ல் Ryanair விமானத்தை பொய்யான வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்து பெலாரஸ் அதிகாரிகள் திசை திருப்பினர்.
கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியாவுக்கு பயணப்பட்ட அந்த விமானமானது போலியான வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசர அவசரமாக Minsk நகரில் தரையிறக்கப்பட்டு, பத்திரிகையாளர் Roman Protasevich மற்றும் அவரது காதலி Sofia Sapega ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து வார்சா பிராந்திய நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு எதிராக மூன்று கைது உத்தரவுகளை அறிவித்தது.
போலந்தில் பதிவு செய்யப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றை போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து திசை திருப்பி, அவசரமாக தரையிறக்கியதாக அந்த மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதில், மின்ஸ்க் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் குழுத் தலைவர், பெலாரஸ் விமான ஏஜென்சியின் முன்னாள் இயக்குநர் மற்றும் பெலாரஸ் உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் என அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
15 ஆண்டுகள் வரையில் சிறை
இந்த மூவரும் போலந்து நாட்டவர்கள் அல்ல என்ற போதும், சர்வதேச ரீதியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக போலந்து அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
பயணிகள் விமானம் ஒன்றை போலியாக மிரட்டல் விடுத்து திசை திருப்புவது என்பது பயங்கவாத நடவடிக்கை என குறிப்பிட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என வார்சா பிராந்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெலாரஸ் நகரில் கைதான பத்திரிகையாளர் Roman Protasevich நீதிமன்ற விசாரணையை அடுத்து 2023ல் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டு பெலாரஸ் அரசாங்கத்தால் மன்னித்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், Roman Protasevich கட்டாயப்படுத்தப்பட்டதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |