கொரோனாவால் 2வது முறையாக பாதிக்கப்பட்ட பிரபல நாட்டின் ஜனாதிபதி!
போலந்து நாட்டின் ஜனாதிபதிக்கு 2-வது முறையாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) தற்போது இரண்டாவது முறையாக கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவ்ருக்கு தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அதிபரின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், ஆனால் நலமாக இருப்பதாகவும் அவரது உதவியாளர் Pawel Szrot ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
49 வயதான டுடா, கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு, கடந்த மாதம் பூஸ்டர் ஷாட்டையும் பெற்றார். அனால், ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடையே தொற்று பரவியிருப்பது தெரியவந்த நிலையில், அவர் இந்த வாரம் சோதனை செய்யப்பட்டார்.
டுடா, முன்னதாக அக்டோபர் 2020-ல் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். அப்போதும் அவர் பெரிதாக உடல்நலக் குறைவை அனுபவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
போலந்தில் புதன்கிழமை 17,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் மற்றும் 630-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட போலந்தில், கொரோனாவால் 4 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 99,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.