ரஷ்ய விமானங்கள் அத்துமீறினால் சுட்டு வீழ்த்தப்படும்: எச்சரித்த ஐரோப்பிய நாடு
போலந்து வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் அத்துமீறினால் இனி சுட்டு வீழ்த்தப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.
விவாதத்திற்கு இடமின்றி
இந்த விவகாரத்தில் தங்களை பிரித்தானியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ரஷ்ய விமானங்கள் அத்துமீறும் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டஸ்க் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், எங்களது எல்லைக்குள் அத்துமீறி நுழையும் எந்தப் பொருட்களையும், விவாதத்திற்கு இடமின்றி சுட்டு வீழ்த்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும், இப்படியான முடிவு மிகக் கடுமையான மோதலைத் தூண்டக்கூடும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அத்துடன், இந்த முடிவில் நேட்டோ உறுப்பு நாடுகளும் ஒத்துழைக்குமா என்பதில் முழுமையான உறுதிப்பாடு தேவை என்றார்.
வெள்ளிக்கிழமை மூன்று ரஷ்ய மிக்-31 ரக விமானங்கள் எஸ்தோனியாவின் வான்வெளியில் 12 நிமிடங்கள் பறந்தன, மேலும் இரண்டு போர் விமானங்கள் பால்டிக்கில் உள்ள போலந்து எண்ணெய் வயலின் மீது பறந்தன.
பதிலடிக்கு அழைப்பு
நேட்டோ விமானங்கள் புறப்பட்டு அச்சுறுத்தியதன் பின்னரே மிக் விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. முன்னதாக ரஷ்ய ட்ரோன்களின் அலை ஒன்று கிழக்கு போலந்தைத் தாக்கியது, டச்சு F-35 விமானங்கள் அவைகளைச் சுட்டு வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், செக் குடியரசுத் தலைவர் பீற்றர் பாவெல் நேட்டோ இராணுவ பதிலடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நாம் உறுதியாகச் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றும், அத்துமீறல்கள் நடந்தால், இராணுவ ரீதியாகவும் பதிலளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றே ரஷ்யா மறுத்து வருகிறது. மட்டுமின்றி, பொய்யான தகவல்களை குறிப்பிட்ட சில நாடுகள் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |