30 வருட கொலை வழக்கில் 60 வயது கறுப்பினத்தவரை தவறாக கைது செய்த பொலிஸ்! பரபரப்பை கிளப்பியுள்ள புதிய வழக்கு...
அமெரிக்காவில் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தன்னை தவறாக கைது செய்ததற்காக காவல் துறை மீது பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர் தொடர்ந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Rhode Island பகுதியில் உள்ள Pawtucket நகரில் 1988-ஆம் ஆண்டு Christine Cole எனும் 10 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர் அவர் 54 நாட்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஒரு தெருவில் பிணமாக கிடைத்தார். அந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாகவும், சிறுமியின் துணியில் இருந்த ஒரு இரத்தக் கறைகள் மூலமாக குற்றவாளியை கண்டுபிடிப்பதாகவும் Pawtucket பகுதி காவல்துறை வழக்கை தூசி தட்டி எடுத்தது.
இதைத் தொடர்ந்து, சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் கடைசியாக காணப்பட்டதாககே கூறப்படும் இடத்தில், ஒரு குடியிருப்பில் வாழ்ந்துவந்த Joao 'John' Monteiro எனும் 60 வயது கறுப்பினத்தவரை சந்தேகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலே மாதம் Pawtucket பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், 8 மாதங்கள் கழித்து சோதனையில் இவரது DNA சற்றும் ஒத்துப்போகாததையடுத்து, அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
ஆனால், வெளியில் வந்த அவர் தனது 15 வருட வேலையை இழந்தது மட்டுமல்லாமல் பல துன்பங்களை அனுபவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் Cape Verde பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து, தனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த Monteiro, இந்த வழக்கில் தேவையில்லாமல் சிக்கி வெளிவந்த நிலையில், விரக்தியடைந்து மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், Monteiro கடந்த செவ்வாய்க்கிழமை Pawtucket காவல் துறையைச் சேர்ந்த சூசன் கோர்மியர், ட்ரெவர் லெபெப்வ்ரே, மேஜர் டேனியல் முல்லன் மற்றும் தலைமை டினா கோன்கால்வ்ஸ் ஆகிய 4 பொலிஸ் அதிகாரிகள் மீது 'புகழுக்கு ஆசைப்பட்டு மற்றும் கவண் ஈர்ப்புக்காகவும்' நீண்ட நாள் வழக்கை முடிப்பதற்காக தன்னை கைது செய்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது இனத்தை குறிவைத்து இந்த காரியத்தை அவர்கள் செய்திருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான DNA ஆதாரங்களை வழங்கிய ரோட் தீவின் சுகாதாரத் துறையின் பணியாளரான தமரா வோங் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இப்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


