துஸ்பிரயோகத்திற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நபர்: திருட்டு வழக்கில் அம்பலமான பகீர் சம்பவம்
இந்திய மாநிலம் ஆந்திராவில் திருட்டு சம்பவத்தை நேரடியாக பார்த்த நபரை கொலை செய்த இருவர், அதே நாளில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியதும் அம்பலாகியுள்ளது.
ஆந்திராவின் தாடேப்பள்ளி பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் கைதான ஷெர் கிருஷ்ணா என்பவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், நபர் ஒருவரை கொலை செய்து அவரின் பணம் மற்றும் மொபைலை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஷெர் கிருஷ்ணா தமது நண்பரான வெங்கட் ரெட்டி என்பவருடன் இணைந்து இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கூலித்தொழிலாளிகளான இருவரும், சமீப நாட்களில் போதிய வேலை கிடைக்காத நிலையில், ரயில் தண்டவாளத்தில் இணைக்கப்பட்டுள்ள தாமிர கம்பிகளை திருடி விற்று வந்துள்ளனர்.
ஆனால் சம்பவம் நடந்த ஜூன் 19ம் திகதி இவர்கள் இருவரும் தாமிர கம்பி திருடுவதை ஆனந்த் என்பவர் பார்த்துள்ளார். தெருத்தெருவாக சென்று வியாபாரம் பார்த்து வருபவரான ஆனந்தை, அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்து, இரும்பு கட்டையால் இணைத்து, கிருஷ்ணா ஆற்றில் தள்ளியுள்ளனர்.
பின்னர் இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை இவர்கள் இருவரும் மிரட்டி, அந்த இளைஞரை அங்கிருந்து துரத்திவிட்டு, பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து மாயமாகியுள்ளனர். இதனிடையே ஜூன் 22ம் திகதி மிருதுலா என்பவர் தமது கணவர் ஆனந்தை காணவில்லை என பொலிசாரை நாடியுள்ளார். மட்டுமின்றி, ரயில் நிலையத்தில் இருந்து தம்மை மொபைலில் தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் மிருதுலா தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், மாயமான ஆனந்த் அந்த இருவர் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து ஷெர் கிருஷ்ணா என்பவரையும், இவரது நண்பர் ஹபீப் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் இதுவரை ஆனந்தின் உடலை பொலிசார் மீட்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.