சுவிஸில் மாயமான ஜேர்மானியர் தொடர்பில் பெருந்தொகை சன்மானம் அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் மாயமான ஜேர்மானிய இளம் பெண் தொடர்பில் தகவல் தெரிவிப்போர்களுக்கு பொலிஸ் தரப்பில் பெருந்தொகை சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மானியரான 26 வயது ஆய்வாளர் Heidi Scheuerle கடந்த 1996 அக்டோபர் 8ம் திகதி திடீரென்று மாயமாகியுள்ளார். துர்காவ் மாநிலத்தின் Kreuzlingen பகுதியில் வசித்து வந்த அவர் சம்பவத்தன்று Weil am Rhein பகுதிக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பியுள்ளார்.
பயணத்திற்கு போதுமான தொகை கைவசம் இருந்தும், சாலையில் அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு வாகனமாக அவர் ஏறி செல்லவே விரும்பியுள்ளார். அதுவே புதுமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுவிஸ் விமான சேவை ஊழியர் ஒருவர் Winterthur அருகாமையில் Forrenberg பகுதியில் அவரை தமது வாகனத்தில் கொண்டு சென்று சேர்ப்பித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வேறொரு வாகனத்தில் ஏறி சென்றதாக அந்த ஊழியர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதன் பின்னர் Heidi Scheuerle என்ன ஆனார் என இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அக்டோபர் 10ம் திகதி அவர் மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துர்காவ் மாநில பொலிசார் உடனடியாக விசாரணையை தொடங்கி 300 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்தனர். ஆனால் மாயமான ஜேர்மானியரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, 2000 அக்டோபர் 28ம் திகதி காளான் எடுப்பவர் ஒருவர் காட்டில் மனித மண்டையோடு ஒன்றை கண்டுபிடித்தார். 2002ல் அது மாயமான ஜேர்மானியரின் மண்டையோடு என டி.என்.ஏ சோதனையில் முடிவானது.
Heidi Scheuerle படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆனால் அது எவ்வாறு நடந்தது, அதன் பின்னணியில் யார் என்பதில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் இல்லாத நிலையில், தற்போது தகவல் தெரிவிப்போருக்கு 50,000 பிராங்குகள் சன்மானம் அறிவித்துள்ளனர் துர்காவ் பொலிசார்.