ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்?
பிரான்சின் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடிக்க காரணமான, பொலிஸ் வன்முறைக்கு பலியான 17 வயது இளைஞர் மற்றும் அவரது குடும்ப பின்னணி தொடர்பில் முழு தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் வன்முறைக்கு இரையானவர்
பாரிஸ் நகரின் மேற்கில் Nanterre பகுதியில் தாயார் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த 17 வயது இளைஞர் நஹெல் எம் என்பவரே பொலிஸ் வன்முறைக்கு இரையானவர். தாய்க்கு ஒரேயொரு மகனான நஹெல் எம், உணவு விநியோக சாரதியாகவும், ரக்பி லீக் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார்.
@reuters
கல்லூரியில் பதிவு செய்திருந்தாலும், படிப்பில் ஆர்வமில்லாத இளைஞர். மட்டுமின்றி Nanterre பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான இளைஞராகவும் திகழ்ந்துள்ளார். தாயார் மௌனியா உடன் வாழ்ந்து வந்தாலும், தந்தை யார் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு செல்லும் முன்னர், தாயாருக்கு முத்தமிட்டு, அன்பு செய்கிறேன் என கூறிவிட்டு சென்றவர் பின்னர் சடலமாகவே திரும்பியுள்ளார். பகல் 9 மணியளவில், பொலிசாரால் மார்பில் சுடப்பட்ட நிலையில் சடலமாக இளைஞர் நஹெல் மீட்கப்பட்டார்.
@epa
எனது மொத்த வாழ்க்கையும் அவனுக்காக வாழ்ந்தேன், எனக்கு ஒரே ஒரு பிள்ளை, இனி நான் என்ன செய்வேன் என தாயார் மௌனியா கதறியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
கொலை செய்வதற்கான உரிமை
வாகனத்தை நிறுத்த மறுப்பது என்பது கொலை செய்வதற்கான உரிமையை தந்துவிடாது என இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ளார் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஒலிவியர் ஃபாரே.
கடந்த மூன்று ஆண்டுகளாக Pirates of Nanterre என்ற ரக்பி அணியில் நஹெல் விளையாடி வருகிறார். போதை மருந்து அல்லது துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மத்தியில் சமூக ரீதியாகவும் தொழில்முறை ரீதியாகவும் நஹெல் பாராட்டுக்குரியவர் என்கிறார் இன்னொரு இளைஞர்.
@getty
அல்ஜீரியா வம்சாவளி என்பதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட கூடாது என சிலர் குறிப்பிட்டுள்ளனர். நீங்கள் கருப்பின மக்கள் அல்லது அரேபிய வம்சாவளி என்றால், பொலிஸ் வன்முறைக்கு நாளும் இலக்காகும் நிலை பிரான்சில் உள்ளது என்கிறார் இளைஞர் ஒருவர்.
பொலிஸ் கண்காணிப்பில்
ஆனால் நஹெல் விவகாரம் இனவாதம் அல்ல, நீதிக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார் இவர்கள் தரப்பு சட்டத்தரணி Yassine Bouzrou. எந்த குற்றவியல் பின்னணியும் இல்லாத நஹெல் 2021ல் இருந்தே பொலிஸ் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார் என்பதுடன், ஒத்துழைக்க மறுத்தார் என குறிப்பிட்டு ஐந்து முறை பதிவு செய்யப்பட்டுள்ளார்.
@ap
மேலும், கடந்த வார இறுதியில், இதே ஒத்துழைக்க மறுத்தார் என குற்றஞ்சாட்டி பொலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சூழலில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |