இரு நாடுகளின் ஆவணங்களுடன் இந்திய பொலிசாரிடம் சிக்கிய தம்பதி: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி
இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு செல்ல முயன்ற ஒரு தம்பதியை, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள் இந்திய பொலிசார்.
அப்போது பிஸ்வஜித்தாஸ், ரிங்குதாஸ் என்னும் அந்த தம்பதியரிடம், பிரெஞ்சு பாஸ்போர்ட்களும், இந்திய பாஸ்போர்ட்களும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் சர்க்கார், ரிங்கு சர்க்கார் என்றும், இந்திய பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் தாஸ், ரிங்கு தாஸ் என்றும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது.
மேலும் அவர்களை சோதனையிட்டபோது, பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை ஆவணங்களும் அவர்களிடம் இருந்துள்ளன.
விடயம் என்னவென்றால், அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமக்கள். 2018ஆம் ஆண்டு, தம்பதியர் கத்தாருக்குச் சென்றிருந்தார்களாம். அப்போது, அங்கு ஒரு ஏஜண்ட் அவர்களுக்குத் தான் பிரான்சில் புகலிடம் பெற்றுத்தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இவர்களும் அதற்கு சம்ம்மதிக்க, ஆனால், பங்களாதேஷ் நாட்டவர்கள் என்றால் எளிதாக பிரான்சில் அடைக்கலம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் ஏஜண்ட். அதற்கும் இவர்கள் சம்மதிக்க, 8முதல் 9 இலட்ச ரூபாய் செலுத்தி, எல்லா ஏற்பாடும் செய்து, தம்பதியர் இப்போது பங்களாதேஷ் குடிமக்கள் என்ற போர்வையில் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்தியாவில் ரிங்குவின் தந்தை இறந்துபோக, அவரது இறுதிச்சடங்குகளை செய்வதற்காக தங்கள் மகளையும் அழைத்துக்கொண்டு பிரான்சிலிருந்து இந்தியா வந்த தம்பதியர், மீண்டும் பிரான்ஸ் திரும்ப முயன்றபோது வசமாக சிக்கிக்கொண்டார்கள்.
இதற்கு முன் இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிக்கும் இதே தம்பதியர், இப்போது பிரான்ஸ் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிக்க முயற்சிக்கவே, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் உண்மை வெளிவர, கைது செய்யப்பட்டுள்ள தம்பதியர் மீது, மோசடி, ஆவண மோசடி முதலான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் தூதரகத்துக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய பொலிசார், தொடர்ந்து தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.