ஆக்ஸிஜன் உருளை இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி வரலாறு படைத்த ஐரோப்பியர்
போலந்து நாட்டின் சாகச வீரர் ஒருவர் ஆக்ஸிஜன் உருளையைப் பயன்படுத்தாமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பனிச்சறுக்கு விளையாடிய முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
மூன்றாவது முறையாக
ஏற்கனவே இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாகசம் செய்ய முயன்று தோல்வி கண்டிருந்த Andrzej Bargiel தற்போது மூன்றாவது முறையாக முயன்று, சாதித்துள்ளார்.
பூமியிலேயே மிகவும் உயரமான (8,849 மீற்றர்) எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 2019 மற்றும் 2022ல் முயன்று, ஆபத்தான நிலைமைகளால் கைவிட்டிருந்தார். தற்போது மிக நெருக்கடியான சூழ்நிலையிலும், மூன்றாவது முறையாக சாதித்துள்ளார்.
மட்டுமின்றி, எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து ஆக்ஸிஜன் பயன்படுத்தாமல் பனிச்சறுக்கு விளையாடுவது என்பது தமது கனவு என குறிப்பிடும் அவர், பல ஆண்டுகளாக இப்படியான ஒரு தருணத்திற்காக காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 6,000 பேர்களில், சுமார் 200 பேர்கள் மட்டுமே கூடுதல் ஆக்ஸிஜன் உருளைகளை பயன்படுத்தாமல் சாதித்துள்ளனர். சிலர் ஆக்ஸிஜன் இன்றி, கீழிறங்க முயன்று, பாதியில் அந்த முயற்சியை கைவிட்டுள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவே பார்கீலுக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் ஆனது. அப்பகுதியானது 8,000 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது, அங்கு ஆக்ஸிஜன் அளவும் மிக ஆபத்தான அளவுக்கு குறைவு.
மிகவும் ஆபத்தான
மலை உச்சியில் காற்று மிகவும் மெல்லியதாக இருப்பதால், ஏறுபவர்கள் கடல் மட்டத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜனில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறார்கள். இதனால் மூளை பாதிப்பு, நுரையீரலில் திரவம் தேங்குதல் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும்.
திங்கட்கிழமை மலை ஏறிய பார்கீல், செவ்வாய்க்கிழமை காலை, கும்பு பனிச்சரிவு வழியாக கீழே சறுக்கி வரத் தொடங்கினார். இப்பகுதியானது எவரெஸ்டின் மிகவும் ஆபத்தான பிரிவுகளில் ஒன்றாக அறியப்படும் ஆழமான பிளவுகள் கொண்ட பகுதியாகும்.
இந்தப் பகுதி வழியாக அவர் தனது சகோதரரால் பறக்கவிடப்பட்ட ஒரு ட்ரோன் மூலம் ஓரளவு வழிநடத்தப்பட்டார். பனிச்சறுக்கு மலையேற்ற உலகில் இது ஒரு திருப்புமுனை மைல்கல் என்று பார்கியலின் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |