பல பெண்களையும், சிறுமிகளையும் துன்புறுத்தி.. அமெரிக்க பாப் பாடகருக்கு 30 ஆண்டுகள் சிறை!
அமெரிக்க பாப் பாடகருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரபல பாப் பாடகரான ஆர்.கெல்லி அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் கெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்தார்.
PC: Mike Pont/Getty Images
அதன் பின்னர் அவர் மீது சிகாகோ, புரூக்ளின் நீதிமன்றங்களில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் கெல்லி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமிகளை வேளைக்கு அமர்த்தி, கடத்திக்கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவற்றை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், கெல்லி தன் மீதான வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் நீதித்துறை நடவடிக்கைக்கு எதிராக செயல்பட முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1990 களில் இளம் பெண்களை கெல்லி துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக பரவ ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டு பெண்ணொருவரால் கெல்லி மீது வழக்குத் தொடரப்பட்டது, பின்னர் அவர் சிகாகோவில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புடைய ஆபாச குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
PC: ANTONIO PEREZ/GETTY IMAGES