நெருங்கும் புடின் - ட்ரம்ப் சந்திப்பு... இரண்டு நாடுகள் தெரிவு: கசிந்த தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
சந்திக்கத் தயாராக
உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறிய ட்ரம்ப், புடினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ட்ரம்புக்கு புடின் வாழ்த்து தெரிவித்ததோடு, உக்ரைன் மற்றும் எரிசக்தி குறித்து விவாதிக்க ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சந்திப்பிற்கு முன்னதாக டிரம்ப் மற்றும் புடின் இடையே ஒரு தொலைபேசி உரையாடலுக்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் பலமுறை மறுத்துள்ளனர்.
இருப்பினும், ரஷ்ய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தரவுகளின் அடிப்படையில், சமீபத்திய வாரங்களில் மூத்த ரஷ்ய அதிகாரிகள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாட்டிற்கும் விஜயம் செய்துள்ளனர்.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டும் அமெரிக்காவுடன் கொண்டுள்ள நெருங்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்புகளை சில தூதரக அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதால், ரஷ்யாவில் இந்த யோசனைக்கு இன்னும் சில எதிர்ப்புகள் இருப்பதாக ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் ட்ரம்ப் மற்றும் புடின் இருவரும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து பேசிய ட்ரம்ப் தனது நிர்வாகம் உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை திட்டமிட்டுள்ளது என்றார்.
முதல் வெளிநாட்டு தலைவர்
மேலும், ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளப்பட்ட முதல் வெளிநாட்டு தலைவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்றே தகவல் வெளியானது.
மட்டுமின்றி, 2023ல் ஐக்கிய அமீரகத்திற்கு விஜயம் செய்துள்ள விளாடிமிர் புடின், பனிப்போருக்குப் பிறகு மிகப்பெரிய அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தை ஏற்பாடு செய்ய உதவியதற்காக முகமது பின் சல்மானுக்கு நன்றி தெரிவித்தார்.
மட்டுமின்றி, 2015 ஆம் ஆண்டு இளவரசர் சல்மான் முதல் முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ததிலிருந்து இரு தலைவர்களும் நெருங்கிய தனிப்பட்ட உறவினை பேணி வருகின்றனர்.
இதன் காரணமாகவே, சவுதி அல்லது ஐக்கிய அமீரகத்தை ரஷ்யா தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தரப்பு அல்லது ரஷ்யா தரப்பு இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவலேதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |