திபெத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிந்து விழுந்த நூற்றுக்கணக்கான வீடுகள்
Powerful earthquake in China’s Tibet region: சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
சீனாவின் திபெத் பிராந்தியத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 16 பேர் மரணமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள்
இதில் 54 பேர் காயமடைந்ததாகவும் வடக்குப் பிராந்திய நகரமான நகுவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது 339 வீடுகளும் 20 கால்நடைத் தொழுவங்களும் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, நகர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர். 1,000 முன் தயாரிக்கப்பட்ட வீடுகள், சுமார் 3,000 கூடாரங்கள் மற்றும் மடிக்கக்கூடிய படுக்கைகள், அத்துடன் கைவிளக்குகள் மற்றும் குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 10:33 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி வடக்கு திபெத்தின் மக்கள் தொகை குறைவாக உள்ள உயரமான பகுதியான நகுவிலிருந்து 191 கிலோமீற்றர் கிழக்கு-வடகிழக்கில் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 18 கிலோமீற்றர் எனவும் அது மதிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 4.3 முதல் 5.2 வரையிலான ரிக்டர் அளவிலான குறைந்தது ஏழு பின் அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளது; அவை அனைத்தும் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டிருந்தன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களை நிறுத்த உள்ளூர் ரயில்வே அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மிகப்பெரிய நிலநடுக்கம்
சின்ஹுவா தகவலின்படி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாறைச்சரிவுகள் காரணமாக, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால், உள்ளூர் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை 317-இன் ஒரு பகுதியை மூடி, அவசர, மீட்பு மற்றும் அதிகாரப்பூர்வ ஆதரவு வாகனங்களை மட்டும் கடந்து செல்ல அனுமதித்தனர்.
அடுத்த மூன்று நாட்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் விட்டுவிட்டுப் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என சீனாவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.