32 பேர்களைப் பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
திங்கள்கிழமை அதிகாலையில் தெற்கு பிலிப்பைன்ஸின் சில பகுதிகளை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 32 பேர் மரணமடைந்துள்ளனர்.
மக்களுக்கு எச்சரிக்கை
கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. தெற்கு பிலிப்பைன்ஸின் சரங்கனி மாகாணக் கடற்கரையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மட்டுமின்றி, மின்டானாவ் முழுவதும் மற்றும் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள மனடோ நகரிலும் (420 கி.மீ. தொலைவில்) நில அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டன.
மின்டானோ முழுவதும், பெரும்பாலும் இடிபாடுகளில் சிக்கியும் நிலச்சரிவுகளாலும் 32 பேர் மரணமடைந்ததாகவும், 134 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் நீடிப்பதால், சேதமடைந்த வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தை அடுத்து மின்த் தடைகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு முகமையின் ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, நிலநடுக்கத்தின் மையம் ஜெனரல் சாண்டோஸ் நகரத்திற்குத் தென்மேற்கே 8 மைல் தொலைவிலும், 6.2 மைல் ஆழத்திலும் அமைந்திருந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தீவிரம் 7.8 ரிக்டர் அளவிலும், ஆழம் 34 மைல்களாகவும் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கைகள் ரத்து
தெற்கு பிலிப்பைன்ஸ், வடக்கு இந்தோனேசியா மற்றும் போர்னியோ தீவில் உள்ள மலேசியாவின் சபா மாநிலம் ஆகிய பகுதிகளில், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சுனாமி எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, அரசு முகமைகள் சேதங்களை மதிப்பிடுவதையும், மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான பாதைகளைச் சீரமைப்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், வெளியேற்ற மையங்கள் தயாராகவும் செயல்பாட்டிலும் உள்ளன என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மற்றும் வடக்கு மலுகு மாகாணங்களில் வசிப்பவர்கள் நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ், உலகின் மிகவும் பேரழிவு அபாயம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், இது அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்தத் தீவுக்கூட்டம் ஆண்டுக்குச் சுமார் 20 சூறாவளிகள் மற்றும் வெப்பமண்டலப் புயல்களாலும் தாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |