பொதுமக்கள் மீது காரை மோதிய ஜேர்மானியர்: பெரும் அசம்பாவிதத்தை தடுத்த புலம்பெயர்ந்தோருக்கு பாராட்டு
ஜேர்மனியின் மான்ஹெய்ம் நகரில், வேண்டுமென்றே மக்கள் கூட்டத்தின் மீது ஜேர்மானியர் ஒருவர் காரைக்கொண்டு மோதியதில் இரண்டுபேர் பலியானார்கள்.
அப்போது, அந்த நபர் மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்கும் வகையில் அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரது காரை தனது காரைக் கொண்டு வழிமறித்துள்ளார் புலம்பெயர்ந்தோர் ஒருவர். அதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின்மீது காரை மோதிய நபர்
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஜேர்மன் குடிமகன் ஒருவர், திங்கட்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 12.15மணியளவில், மான்ஹெய்ம் நகரில், தனது காரைக் கொண்டு மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே மோதியுள்ளார்.
இந்த பயங்கர சம்பவத்தில் 83 வயது பெண்மணி ஒருவரும் 54 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துவிட்டார்கள், 11 பேர் காயமடைந்தார்கள்.
தப்பியோடிய அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டுக்கொள்ள முயலும்போது பொலிசார் அவரைப் பிடித்துவிட்டார்கள்.
பெரும் அசம்பாவிதத்தை தடுத்த புலம்பெயர்ந்தோருக்கு பாராட்டு
இந்நிலையில், அந்த ஜேர்மானியரின் கார் மக்கள் மீது மோதியதும், அவரது காரை தனது டெக்சியில் பின்தொடர்ந்துள்ளார் பாகிஸ்தான் நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர்.
அத்துடன், டெக்சி சாரதியான அந்த புலம்பெயர்ந்தோர், தனது காரைக் கொண்டு அந்த ஜேர்மானியரின் காரை வழிமறித்து, மேலும் அவர் யார் மீதும் மோதாமல் தடுத்துள்ளார்.
அவர் தைரியமாக செயல்பட்டு தாக்குதல்தாரியைப் பின்தொடர்ந்து, அவரது காரை வழிமறித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ள நகர மேயரான Christian Specht, அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |