முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
வீட்டு வேலைக்காரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
2021 முதல் பலமுறை
இந்த ரேவண்ணா முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமியின் மருமகனுமாவார். ரேவண்ணா தாம் துஸ்பிரயோகம் செய்த 48 வயது பெண் தொடர்பிலான காணொளிகளை பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஹசன் மாவட்டம் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தினரின் பண்ணை வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த அந்தப் பெண், 2021 முதல் பிரஜ்வால் ரேவண்ணாவால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு இரையானதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மட்டுமின்றி, அவர் அந்தச் செயலைப் பதிவு செய்து, தான் செய்ததை யாரிடமாவது சொன்னால் காணொளிகளை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், 34 வயதான ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை, துஸ்பிரயோகம், குற்றவியல் மிரட்டல் மற்றும் நெருக்கமான படங்களை சட்டவிரோதமாக பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
பழக்கமான குற்றவாளி
வெள்ளிக்கிழமை நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் என்பவரால் ரேவண்ணா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், சனிக்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சார்பாக ஆஜரான சிறப்பு அரசு சட்டத்தரணி பி.என். ஜெகதீஷ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
வெளியான பாலியல் வன்கொடுமை காணொளியானது பிரஜ்வாலின் கொடூரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், சட்டம் பற்றி முழுமையாக அறிந்திருந்த நிலையிலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர் பல பெண்களின் காணொளிகளைப் பதிவு செய்யும் ஒரு பழக்கமான குற்றவாளி என்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார்.
இந்த நிலையில், துஸ்பிரயோக காணொளிகளை பரப்பியதற்காக நீதிமன்றம் அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையும், ஐந்து பிரிவுகளின் கீழ் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐடி சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |