ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வான ஜெய்ஷா.., விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
ஜெய்ஷா தேர்வு
கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா இருந்து வருகிறார். ஐசிசியின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லே என்பவர் தொடர்ச்சியாக இருமுறை பதவி வகித்த வந்த நிலையில், அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறுகிறது.
பின்னர், மூன்றாவது முறையாக தனக்கு பதவி வகிக்க விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் விலகி கொள்வதாகவும் கிரேக் பார்க்லே அறிவித்தார்.
இதையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 27 -ம் திகதிக்குள் வேட்புமனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதனால், ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டிசம்பர் 1 -ம் திகதி ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
பிரகாஷ் ராஜ் விமர்சனம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்" என்று கூறியுள்ளார்.
ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எக்ஸ் தளத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்த பதிவிற்கு பிரகாஷ் ராஜ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |