ரஷ்யா குண்டுவீசியதில் காயமடைந்த கர்ப்பிணி பெண், சிசு பலி! கலங்கடிக்கும் இறுதி நிமிடங்கள்
உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய குண்டுவீசி தாக்கியதில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய குண்டுவீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிண பெண், காயமடைந்த நிலையில் ஸ்டெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
இந்நிலையில், ஸ்டெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அன்று ஸ்டெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி, அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவரை உயிருடன் வைத்திருக்க பாடுபட்டுள்ளனர். தன் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அப்பெண், தன்னை உடனே கொல்லும் படி கெஞ்சியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சிசேரியன் மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர், ஆனால் துரதிஷ்டவசமாக சிசு இறந்து பிறந்துள்ளது.
பின் தாயை காப்பாற்ற 30 நிமிடங்களுக்கு மேல் போராடியும், அவரையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மகப்பேறு மருத்துவமனையை உக்ரேனிய போராளிகள் தளமாக பயன்படுத்தி வந்ததாகவும், அங்கு மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் யாரும் இல்லை என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கர்ப்பிணி பெண் ஸ்டெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட புகைப்படம் போலியானது என ஐ.நா-வுக்கான ரஷ்ய தூதர் மற்றும் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.