ஆண் குழந்தைக்காக கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலர்
பாகிஸ்தானில் ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றுள்ளார். தமது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று குறித்த பெண்மணி கோரியுள்ளார்.
குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையிலேயே நடந்த சம்பவத்தை குறித்த பெண் வெளியிட்டுள்ளார்.
கர்ப்பிணியான தமக்கு இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் ஹீலரிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவரோ, தமது தலையில் 5 செமீ அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பியுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது எனவும் அதை அகற்ற வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவர்கள் குறித்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி சிகிச்சைக்கு பின்னர் அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை சிசிடிவி கமெரா காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
அவரை விசாரித்து அந்த ஹீலரை கைது செய்யப்போவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆண் பிள்ளை வேண்டும் என்பதற்காக தாமே ஆணியை தலையில் அறைந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் மேலும் விசாரித்ததில் தலையில் ஆணியை அந்த ஹீலர் அறைந்தது தொடர்பில் குறித்த பெண் ஒப்புக்கொண்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.