நீங்கள் தவறு செய்கிறீர்கள்... புடினை நேரடியாக விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி: புடினுடைய ரியாக்ஷன்
இன்று காலை பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உக்ரைன் போர் தொடர்பாக பேசியுள்ளார்.
நீங்கள் இல்லாததை இருப்பது போல் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று புடினிடம் கூறிய மேக்ரான், நீங்கள் உங்களிடமே பொய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள், இந்த போரால் உங்களுக்கு இழப்பு நிச்சயம், உங்கள் நாடு தனித்து விடப்படும், பலவீனப்படும், நீண்ட காலத்துக்கு உங்கள் மீது தடைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
மேக்ரான் புடினுடன் தொலைபேசி உரையாடலை முடித்தபின், அவர் புடினுடன் பேசிய விடயங்கள் குறித்து அவரது உதவியாளர் ஒருவர் கூறும்போது, புடின் கூறுவதைப் பார்த்தால், இனிமேல்தான் மோசமான விடயங்கள் அரங்கேற உள்ளது போல் தெரிவதாகவும், தான் உக்ரைன் மீதான நடவடிக்கைகளை தொடர இருப்பதாக புடின் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் முழுவதையும் புடின் கைப்பற்ற விரும்புவதாக தெரிவித்த மேக்ரானின் உதவியாளர், அவர் அதை எப்படியாவது நிறைவேற்றும் முடிவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, தூதரக நடவடிக்கைகள் வாயிலாகவாவது அல்லது போர் மூலமாவது தான் நினைத்ததை நடத்தி முடிக்க புடின் உறுதியாக உள்ளாராம்.
புடினிடம் மேக்ரான், நீங்கள் ஒரு இறையாண்மை கொண்ட ஒரு தனி நாட்டை ஊடுருவதன் மூலம் பெரிய தவறு செய்கிறீர்கள் என்றும், அதனால் ரஷ்யாவுக்கும் இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் மீதான தாக்குதலை தவிர்க்குமாறு புடினை மேக்ரான் கேட்டுக்கொண்டதாகவும், தான் முடிந்தவரை பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கவே விரும்புவதாக புடின் தெரிவித்துள்ளதாகவும், ஆனாலும், அவர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் மேக்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், பொதுவாக சில நேரங்களில் புடின் பொறுமையிழந்து விடுவாராம். ஆனால், மேக்ரான் இவ்வளவு விடயங்கள் பேசியும் அவர் கோபமடையவில்லை என மேக்ரானின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.