இளவரசி டயானாவின் மரணம்தான் ராஜ குடும்ப பொறுப்புகளைத் துறக்கக் காரணம்: இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி, தன் தாயின் மரணம்தான், தான் ராஜ குடும்ப பொறுப்புகளைத் துறக்கக் காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
இளவரசி டயானாவின் மரணம்தான் காரணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, அவுஸ்திரேலியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், தன் தாயாகிய இளவரசி டயானா குறித்த சில விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

எனது 13ஆவது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன் என் தாய் கொல்லப்பட்டார். என் தாய் இறந்ததும், எனக்கு இந்த ராஜ குடும்ப பணி வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் இளவரசர் ஹரி.

ராஜ குடும்பப் பொறுப்புதான் தன் தாயைக் கொன்றுவிட்டது என்று தான் கருதியதாக தெரிவித்துள்ள ஹரி, அப்படி தன் தாயைக் கொன்ற அதே ராஜ குடும்ப பொறுப்பு தனக்கு வேண்டாம் என தான் முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் தாயான இளவரசி டயானா, 1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதி, தனது 36ஆவது வயதில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாப்பராஸிகள் என்னும் புகைப்படக்காரர்களிடமிருந்து தப்பிச் செல்லும் முயற்சியின்போது விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

தன் தாய் உயிரிழந்தபோது வெறும் 12 வயதே ஆகியிருந்த தன்னை, தன் தாயின் மரணம் கடுமையாக பாதித்ததாக ஏற்கனவே பலமுறை ஹரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |