என் தந்தை சார்லஸ் என்னுடன் பேச மாட்டார்! என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது - இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததால், இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
வழக்கில் தோல்வி
பிரித்தானிய மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
முன்னதாக, இங்கிலாந்தில் ஹரி இருக்கும்போது தானாகவே பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உள்துறை அமைச்சகம் 2020யில் முடிவு செய்தது.
ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளவரசர் ஹரி அதில் தோல்வியடைந்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமரசம் செய்துகொள்ள விரும்புகிறேன்
இந்த நிலையில் இளவரசர் ஹரி வழக்கு குறித்து கூறுகையில், "எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்துகொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.
எனது பொலிஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது" என்றார்.
மேலும் தனது தந்தை குறித்து பேசிய ஹரி, "இந்த பாதுகாப்பு விடயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால், நான் இனி சண்டையிட விரும்பவில்லை. ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
நிச்சயமாக, அவர்கள் பல விடயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், என் குடும்பத்துடன் சமரசம் செய்துகொள்ள விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |