கங்குலியுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம்
prince william plays cricket with ganguly பக்கிங்காம் அரண்மனை முன்பாக, பிரித்தானிய இளவரசர் வில்லியம், கங்குலி உள்ளிட்ட வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், பக்கிங்காம் அரண்மனை முன்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இதில், இந்திய வீரர்கள் சவுரவ் கங்குலி, அஜிங்கியா ரஹானே, மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் உள்ளிட்ட பல முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியானது அடுத்த மாதம் மும்பையில் நடைபெறவுள்ள எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“நான் 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மட்டையை எடுத்ததால், தற்போதைக்கு அவரது திறமைகள் என்னை விடச் சிறந்தவை என்று நினைக்கிறேன்,” என இளவரசர் வில்லியம் கிரிக்கெட் விளையாடியது பற்றி கங்குலி தெரிவித்தார்.
Celebrating Mumbai hosting The Earthshot Prize with a game of cricket on The Mall. 🏏🌍 https://t.co/VpDl3eeiMC
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) October 13, 2026
மேலும், "அடுத்த மாதம் இந்தியா வர உள்ள அவர் அங்கும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். 'இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது, ஒரு தொண்டுப் போட்டி சிறப்பாக இருக்கும்' என்ற கூறினார்.
"அவரது பந்துவீச்சில் நிறைய முன்னேற்றம் தேவை என்று நினைக்கிறேன். இருப்பினும், தாமதமாகக் களமிறங்கி ஓரிரு பவுண்டரிகளை அடிக்கும் மட்டையாளரான அவரை, ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் தான் தேர்ந்தெடுப்பேன் என்று பிரையன் லாரா கூறினார்.
அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் பேசிய இளவரசர் வில்லியம், "சௌரவ் கங்குலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்" என்று தெரிவித்தார்.
பூமியைப் பாதுகாப்பதற்கான யோசனைகளைக் கண்டறிந்து ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் இளவரசர் வில்லியமால் எர்த்ஷாட் பரிசு தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், 5 வெற்றியாளர்களுக்கு தலா 1 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.12.58 கோடி) வழங்கப்படுகிறது.
இதன் 6வது பதிப்பு முதன்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. நவம்பர் 17 அன்று மும்பையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வை கரண் ஜோஹர் தொகுத்து வழங்க உள்ளார்.