மாதங்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம்... சிறை கைதியின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்
இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
தண்ணீர் மட்டுமே பருகி வந்த அவவ்தேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எந்த நேரத்திலும் மரணமடையலாம்
குற்றச்சாட்டு அல்லது விசாரணை ஏதுமின்றி இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர் தமது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி அவரை விடுவிப்பதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையிலேயே அவர் 172 நாட்கள் நீண்ட உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
@Reuters
40 வயதான கலீல் அவவ்தே 2021 டிசம்பரில் இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். குற்றப்பதிவு அல்லது விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சம்பவத்தன்று முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 2ம் திகதி அவரை விடுவிப்பதாக இஸ்ரேல் நிர்வாகம் உறுதி அளித்துள்ள நிலையில், எஞ்சிய நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது.
மாதங்களாக தண்ணீர் மட்டுமே பருகி வந்த அவவ்தேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எந்த நேரத்திலும் மரணமடையலாம் என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கடந்த வாரம் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், உடல் நிலை தேற நீண்ட நாட்களாகும் என சிறை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நிர்வாக தடுப்புக்காவல் என்ற நடவடிக்கைக்கு எதிராக பல ஆண்டுகளாக நீண்டகால உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திய பல பாலஸ்தீனிய கைதிகளில் அவவ்தேவும் ஒருவர்.
ரகசியமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறப்பட்டாலும், கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோ விசாரணைக்கு உட்படுத்துவதோ இல்லை என கூறப்படுகிறது.
@ap
ஆனால், அவர்கள் மீதான தரவுகளை திரட்டி வருவதாகவும், அதுவரை அவர்கள் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தரப்பு கூறி வந்தாலும், இந்த நடவடிக்கைகள் ஆண்டுகள் நீளும் என்றே கூறப்படுகிறது.
அவவ்தே விவகாரத்தில் இஸ்ரேலிய இராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் அல்லது சிறை துறை இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேலில் தற்போது 4,450 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 175 பேர்கள் சிறார்கள் எனவும் 27 பேர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய 670 பாலஸ்தீனியர்கள் விசாரணை ஏதுமின்றி தற்போது நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.