156 பந்தில் 222 ரன் நொறுக்கிய பிரித்வி ஷா! 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரஞ்சி தொடரில் இமாலய வெற்றி
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சிக் கிண்ணத் தொடர் போட்டியில், மகாராஷ்டிரா அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா இரட்டை சதம்
ரஞ்சிக் கிண்ணத் தொடர் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் சண்டிகர் அணிகள் மோதின.
மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 313 ஓட்டங்கள் எடுத்தது. 
ருதுராஜ் கெய்க்வாட் 116 ஓட்டங்களும், சவுரப் நவாலே 66 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சண்டிகர் அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது. நிஷுன்க் பிர்லா 56 (99) ஓட்டங்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மகாராஷ்டிரா அணியில் பிரித்வி ஷா (Prithvi Shaw) ருத்ர தாண்டவம் ஆடினார். இரட்டை சதம் அடித்த அவர் 156 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 29 பவுண்டரிகளுடன் 222 ஓட்டங்கள் விளாசினார்.
சித்தேஷ் வீரர் 62 ஓட்டங்களும், ருதுராஜ் கெய்க்வாட் 36 ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம் மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் குவித்தது.
464 ஓட்டங்கள் இலக்கு
இதனால் 464 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் சண்டிகர் அணி களமிறங்கியது. அணித்தலைவர் மனன் வோஹ்ரா 58 ஓட்டங்களும், ராஜ் பவா 42 ஓட்டங்களும் எடுக்க ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.
மறுமுனையில் கடைசிவரை போராடிய அர்ஜுன் அஸாத் (Arjun Azad) 6 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 168 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சண்டிகர் அணி 319 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, மகாராஷ்டிரா 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகேஷ் சௌத்ரி, ராமகிருஷ்ணா கோஷ் தலா 4 விக்கெட்டுகளும், ஜலஜ் சக்சேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |