கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: மொத்த குடும்பமும் பலியான துயரம்
ஆஸ்திரியாவில் பதிவுசெய்யப்பட்ட செஸ்னா 551 விமானமானது குடும்பம் ஒன்றால் வாடகைக்கு எடுக்கப்பட்டது
விமானியுடன் ஒரு தம்பதி மற்றும் அவரது மகள் ஆகிய நால்வரும் விமானத்தில் பயணப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை
லாத்வியா கடற்பகுதியில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெற்கு ஸ்பெயினில் உள்ள ஜெரெஸிலிருந்து புறப்பட்ட ஆஸ்திரியாவில் பதிவுசெய்யப்பட்ட செஸ்னா 551 விமானமானது குடும்பம் ஒன்றால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி 12.56 மணிக்கு எங்கு பயணப்படுகிறோம் என்பதை குறிப்பிடாமல் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. குறித்த விமானமானது பாரிஸ் மற்றும் கொலோனில் இரண்டு முறை திரும்பியதாகவும், நேராக பால்டிக் மீது செல்வதற்கு முன், ஸ்வீடிஷ் தீவான கோட்லாண்ட் அருகே சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் 5.37 மணிக்கு குறித்த விமானமானது வேகம் மற்றும் உயரத்தை படிப்படியாக இழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, விமானியுடன் ஒரு தம்பதி மற்றும் அவரது மகள் ஆகிய நால்வரும் அந்த விமானத்தில் பயணப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதை ஸ்வீடன் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், குறித்த விமானமானது ஜேர்மன் மற்றும் டென்மார்க் வான்வெளி வழியாகச் சென்றதால் தொடர்புடைய இரு நாடுகளின் போர் விமானங்கள் அந்த விமானத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டன, ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.