பெண்கள் குறித்து ஜேர்மன் சேன்ஸலர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு: 2,000 பேர் ஆர்ப்பாட்டம்
பெண்கள் குறித்து ஜேர்மன் சேன்ஸலர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தலைநகர் பெர்லினில் 2,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
உங்கள் மகள்களைக் கேளுங்கள்...
சமீபத்தில், புலம்பெயர்தல் தொடர்பிலான கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது பெண்கள் குறித்து ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறிய கருத்தொன்றிற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
புலம்பெயர்தல் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மெர்ஸ், பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவதற்கு ஆதரவாக கருத்தொன்றை தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், நேற்று அந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் மெர்ஸிடம் கேள்வி எழுப்பினார்.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது தொடர்பில் நீங்கள் கூறிய கருத்தை சரிசெய்ய விரும்புகிறீர்களா அல்லது அதற்காக மன்னிப்புக் கோர விரும்புகிறீர்களா எனக் கேட்டார் அந்த ஊடகவியலாளர்.
அதற்கு பதிலளித்த மெர்ஸ், உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா, மகள்களும் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. உங்கள் மகள்களிடம் இதே கேள்வியைக் கேளுங்கள், அவர்கள் சத்தமாக, தெளிவாக இந்தக் கேள்விக்கு பதிலளிப்பார்கள் என நான் கருதுகிறேன் என்று கூறினார் மெர்ஸ்.
ஜேர்மன் சேன்ஸலர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு
உங்கள் மகள்களைக் கேளுங்கள் என மெர்ஸ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'நாங்கள்தான் அந்த மகள்கள்' என்னும் சுலோகத்துடன், செவ்வாயன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் 2,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பேரணியில் பேசிய எழுத்தாளரும் பருவநிலை ஆர்வலருமான Luise Neubauer, பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை தான் வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த பெண்களைப் பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள பெண்கள் தயாரில்லை என்றும் கூறியுள்ளார்.
சேன்சலர் மெர்ஸின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல என்றும், அவை பாரபட்சமானவை மற்றும் ஒருவகையில் இன வெறுப்புக் கருத்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒருபக்கம் இப்படி மெர்ஸின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், பவேரியாவின் பிரீமியரான மார்க்கஸ் சோடர் முதலான சில அரசியல்வாதிகள் மெர்ஸின் கருத்தை வரவேற்றுள்ளனர்.
மெர்ஸின் கருத்துக்கு உருவாகியுள்ள எதிர்ப்பு வலதுசாரியினரின் பிரச்சாரத்தால் தூண்டப்படுவதாகவும், அவை உண்மை நிலையிலிருந்து மக்களை திசை திருப்ப முயல்வதாகவும் தெரிவித்துள்ளார் மார்க்கஸ் சோடர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |