'பாரத் ரத்னா விருதுக்கு தகுதியற்றவர் நீங்கள்' சச்சின் டெண்டுல்கர் வீடு முன்பு போராட்டம்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக பாரத ரத்னா விருதை திருப்பி தருமாறு சுயேச்சை எம்.எல்.ஏ, மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்லைன் சூதாட்டம்
இந்தியாவில் ஒன்லைன் சூதாட்டங்களால் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். சூதாட்டத்தினால் தங்களுடைய பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. இதனால், நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனால், இத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஒன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சச்சின் வீடு முன்பு போராட்டம்
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க கூடாது என மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு சுயேச்சை எம்எல்ஏ பச்சு காடு தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியற்றவர் என்றும், அவர் பாரத ரத்னா விருதை திரும்ப கொடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். மேலும், இளைஞர்களின் வாழ்க்கையையும், உயிர்களையும் பறிக்க கூடிய ஒன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சச்சின் ஆதரவு அளிப்பதாக கூறினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தனர். இதனால், சச்சின் டெண்டுல்கர் வீடு முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |