கனடாவை அடுத்து நியூசிலாந்தில் வெடிக்கும் போராட்டம்: தலைநகர் நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்
நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வெலிங்டன் நோக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் Cape Reinga மற்றும் Bluff பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்தைத் தொடும் எண்ணிக்கையில் வாகனங்கள் புறப்பட்டுள்ளன. நியூசிலாந்து அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், தடுப்பூசி விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களில் பலர் குறித்த வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், Christchurch பகுதியில் எரிபொருள் நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் விற்பனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட வாகன சாரதிகளால் எரிபொருள் நிலைய ஊழியர்கள் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் எதிர்கொண்டதாகவே கூறப்படுகிறது.
இருப்பினும், ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக முன்னெடுக்கப்படும் என அறிவுறுத்தியிருந்தனர். நியூசிலாந்தின் தென்பகுதியில் இருந்தும் வட பகுதியில் இருந்தும் தலைநகரில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் புறப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு திரட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மற்றும் வாகன பேரணி தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதகாவும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் பொலிஸ் தரப்பு செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் முன்னெடுக்கப்பட்ட வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஒப்பிட்டு, குறித்த போராட்டமும் முன்னெடுக்கப்படுவதாகவே தெரிய வந்துள்ளது.
கனடாவை பொறுத்தமட்டில், இரண்டு வாரங்கள் நீடித்த லொறி சாரதிகளின் போராட்டமானது, தலைநகர் ஒட்டாவா பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறப்படுகிறது.