பிரித்தானியக் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்
மூன்று நாடுகளில் பரபரப்பை உருவாக்கிய பிரித்தானியக் குழந்தைக் கடத்தல் வழக்கொன்றில் தொடர்புடைய நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியக் குழந்தை கடத்தல் வழக்கு
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கிறிஸ்டியன் (Christian Brueckner) என்னும் நபர், வேறொரு மோசமான குற்றத்துக்கான ஜேர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆக, பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய மூன்று நாட்டு பொலிசார் மேட்லினைத் தேடிவந்தார்கள்.
குழந்தை மேட்லின் காணாமல்போய் சுமார் 18 ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை, ஒருவேளை அவள் சந்தேக நபரான கிறிஸ்டியனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றால் அவளது உடலும் கிடைக்கவில்லை.
கிறிஸ்டியன், குழந்தை மேட்லின் குறித்து ஏதாவது கூறுவாரா என பொலிசார் காத்திருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜேர்மனியின் Sehnde நகரில் வன்புணர்வுக் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்டியன் தனது தண்டனைக்காலம் முடிவடைந்ததால் தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Pic: AP
ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்
கிறிஸ்டியன் யார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்ததையடுத்து அவர் தங்கியிருந்த ஹொட்டல்கள் அவரை வெளியேற்றின.
வீடற்றோர் தங்கும் முகாம்களில் கூட அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைக் குறித்து அறிந்த மக்கள், அவரைக் குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட, சிலர், அவர் தங்கள் ஊரிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
அவரைத் தாக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொலிசார் அவரை அங்கிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றினார்கள்.
ஆனால், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்டியன், ஜேர்மனியிலுள்ள Braunschweig நகரில், தன்னை சிறைக்கு அனுப்பிய அரசு சட்டத்தரணியின் அலுவலகத்துக்குச் சென்று கலாட்டா செய்தார்.
விடயம் என்னவென்றால், அப்போதுதான் Braunschweig நகர மக்களுக்கு தங்கள் ஊரில் இப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, இப்படி ஒரு மோசமான நபர் தங்கள் ஊரில் தங்கியிருப்பதை அறிந்த Braunschweig நகர மக்கள், கிறிஸ்டியனை தங்கள் ஊரிலிருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
சிறை சென்று திரும்பிய குற்றவாளி சமுதாயத்துடன் இணைந்து வாழ வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்னும் எண்ணம் நல்லதுதான்.
ஆனால், இப்படி மோசமான ஒரு நபரை நமது ஊரில் நடமாட அனுமதிக்கக்கூடாது என்கிறார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற Alex Ehmke, (49).
நான் ஒரு தந்தை, எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூறும் Alex, ஆகவே, நான் இந்த விடயத்தை லேசாக எடுத்துக்கொள்ளமுடியாது என்கிறார்.
Images: Sky News
அதேபோல, Annika P என்பவரும், நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றால், அதன் பொருள், எங்கள் தெருக்களில், எங்கள் பிள்ளைகள், எங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என குரல் கொடுப்பதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம் என்கிறார்.
Denise P (38) என்பவரும், இப்படிப்பட்ட ஒரு நபர் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலில் அடைக்கப்பட்டிருக்கவேண்டும்.
அவரது காலில் மின்னணுப்பட்டை மாட்டினால் மட்டும் போதாது என்கிறார்.
ஆகவே, குற்றம் செய்தவர்களின் நலனை விட, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு முக்கியம் என நாங்கள் கருதுகிறோம் என்கிறார் அவர்.