அதை செய்துவிடுவேன்... அச்சுறுத்திய அரசியல் தலைவர்: மொத்த நாட்டிலும் வெடித்த கலவரம்
ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்துவிடுவதாக அரசியல்வாதி ஒருவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், பெரும் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 26 பேர்களை ஸ்வீடன் பொலிசார் கைது செய்துள்ளனர். இதில், நோர்கோபிங் நகரில் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 18 பேர் அண்டை நகரமான லிங்கோப்பிங்கில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் மற்றும் ஸ்வீடன் அரசியல்வாதியான Rasmus Paludan முன்னெடுத்த அகதிகள் எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ஞாயிறன்று நோர்கோபிங் மற்றும் லிங்கோப்பிங் நகரிலும் கலவரம் வெடித்துள்ளது.
இதில், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் காயங்களுடன் தப்பியதாக தெரிய வந்துள்ளது.
சட்டத்தரணியும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான Rasmus Paludan செப்டம்பரில் முன்னெடுக்கப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அறிவித்துள்ளார். ஆனால் அவருக்கு தேவையான ஆதரவு இதுவரை கிட்டாத நிலையில், தற்போது ஸ்வீடனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை கடைபிடித்துவரும் நிலையில், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புனித நூலான குரானை தீக்கிரையாக்குவேன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார் 40 வயதான Rasmus Paludan.
மட்டுமின்றி, சனிக்கிழமை மால்மோ பகுதியில் குரான் நூல் ஒன்றை தீக்கிரையாக்கியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rasmus Paludan தரப்புக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மத்தியில் சமீப நாட்களாக கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் நடந்த கலவரத்தில் 12 பொலிசார் காயமடைந்துள்ளனர். பல பகுதிகளில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் குப்பைகளை குவித்து தீ மூட்டியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.