விஜய் ரோடு ஷோவிற்கு புதுச்சேரியில் அனுமதி மறுப்பு - வேறு திகதியில் பொதுக்கூட்டம்?
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் தனது மக்கள் சந்திப்பை ஒத்தி வைத்திருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 23 ஆம் திகதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து, வரும் டிசம்பர் 5 ஆம் திகதி புதுச்சேரியில் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்புக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தவெக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் வர வாய்ப்புள்ளதால், கரூர் துயர சம்பவம் போல் நிகழலாம் என கூறி காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. அதன் பின்னர் மீண்டும் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.

இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வேறு திகதியில் பொதுக்கூட்டம்?
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி சத்தியசுந்தரம், ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இன்னும் குறுகிய காலமே உள்ளதால், வேறு திகதியில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பேசிய புதுச்சேரி சபாநாயகர் செல்வம், "விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் உள்ளது போல் அகலமான சாலைகள் இங்கு இல்லை.

புதுச்சேரியில் குறுகலான சாலைகளே உள்ளது. விஜய் எங்கு வேண்டுமானாலும் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |