விஜய் கூட்டணியில் இணைய உள்ள புதிய கட்சி - புதுச்சேரியில் வலுப்பெறும் தவெக
தவெக கூட்டணியில், புதிய கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவில் செங்கோட்டையன் இணைவு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது.

தவெக தலைமையை ஏற்று, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்தும் எந்த கட்சிகளும் தற்போது வரை கூட்டணியில் இணையவில்லை.
அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

பெரிய அளவில் அரசியல் அனுபவம் இல்லாத நிர்வாகிகள் உள்ள தவெகவில், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் இணைந்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு கழக நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டணியில் புதிய கட்சி
இந்நிலையில், தவெக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பாஜகவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பயணித்த பின்னர், அந்த கட்சியில் இருந்து விலகி ஜேசிஎம் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

முன்னதாக விஜய் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த இவர், டிசம்பரில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைய போவதாக தெரிவித்துள்ளார்.
தவெகவில் பிரச்சார மேலாண்மை செயலாளராக பணியாற்றி வரும் ஆதவ் அர்ஜுனா, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் சகோதரியை திருணம் செய்துள்ளார்.
சமீபகாலமாகவே ஆதவ் அர்ஜுனா மீது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

ஆதவ் அர்ஜுனா தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் புதிய கட்சியை விஜய் தனது கூட்டணியில் இணைத்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், புதுச்சேரி பாஜகவின் மாநில தலைவராக 8 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சாமிநாதன் மற்றும் காரைக்கால் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா ஆகிய இருவரும் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர்.

விஜய்யின் புதுச்சேரி பயணம்
வரும் டிசம்பர் 5 ஆம் திகதி புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக தரப்பில் இருந்து காவல்துறைக்கு மனு அளித்துள்ள நிலையில், தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

2006 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் புஸ்ஸி ஆனந்த்.
முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், அதிருப்தியிலே பாஜக கூட்டணியில் தொடர்வதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில், விஜய்யின் வருகை புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியிலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கும் தவெகவை பலப்படுத்த விஜய் காய் நகர்த்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |