ஓட்டு போட்டால் தங்கம், நிலம், கார் - வாரி வழங்கும் வேட்பாளர்கள்
பொதுவாக தேர்தல் என்றாலே, வாக்காளர்களை கவரும் வகையில், "நாங்கள் வெற்றி பெற்றால் இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்துவோம்" என அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள்.
ஆனால், முனிசிபல் தேர்தல் ஒன்றில் பரிசு பொருட்கள் வழங்குவது போல் வேட்பாளர்கள் நிலம், தங்கம், கார் என வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்கள்.
வெற்றி பெற்றால் தங்கம், நிலம், கார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகராட்சிக்கு வரும் ஜனவரி 15 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

லோஹகான்-தானோரி வார்டு வேட்பாளர் ஒருவர் தான் வெற்றி பெற்றால், குலுக்கல் மூலம் 11 வாக்காளர்களை தேர்வு செய்து தலா 1,100 சதுர அடி நிலம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதே போல், விமான் நகர் வேட்பாளர், வெற்றி பெற்றால் தம்பதிகளுக்கு தாய்லாந்திற்கு 5 நாள் சொகுசு சுற்றுப்பயணம் வழங்கப்படும், அனைத்து செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
சில வார்டுகளில் குலுக்கல் மூலம் SUV கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெண் வாக்காளர்களை கவர, ஆயிரக்கணக்கான பைதனி பட்டுச் சேலைகள், தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து, ரூ.1 லட்சம் பரிசு உள்ள விளையாட்டு தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நகராட்சி தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக சரத் பவார் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |