அமைச்சரின் காலில் குழந்தையை வைத்து அரசு ஓட்டுநர் கோரிக்கை! நடவடிக்கை எடுத்த அரசு
தமிழகத்தில் அமைச்சரின் காலில் குழந்தையை வைத்து பணி மாறுதல் தொடர்பாக அரசு ஓட்டுநர் கோரிக்கை வைத்த நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் காலில் குழந்தையை வைத்த ஓட்டுநர்
நேற்று, கோயம்புத்தூர் சுங்கம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காலில், அரசு ஓட்டுநர் கண்ணன் என்பவர், தனது 6 மாத குழந்தையை வைத்தார். அப்போது அவர், பணி மாறுதல் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இது குறித்து கண்ணன் கூறும்போது, "தனக்கு 6 மாத குழந்தையும், 6 வயது குழந்தையும் இருக்கிறது. என்னுடைய மனைவி சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் இறந்து விட்டார். தேனி மாவட்டமான எனக்கு தாயின் அரவணைப்பு இல்லாமல் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை.
மேலும், எனது பெற்றோர்கள் வயது முதிர்வின் காரணமாக அவர்களை கோவைக்கு அழைத்து வர இயலவில்லை.
அதனால், எனது சொந்த ஊருக்கு பணி மாறுதல் செய்யும்படி பொது மேலாளரிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன்.
ஆனால், அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இந்த காரணத்தினால் தான் குழந்தையை அமைச்சரின் காலில் வைத்து கோரிக்கை வைத்தேன்" என கூறியிருந்தார்.
முதலமைச்சர் உத்தரவு
இதனைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அரசு ஓட்டுநர் கண்ணன் தனது சொந்த ஊருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு, அரசு ஓட்டுநர் கண்ணன் கூறுகையில், தனது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |