உக்ரைனால் பற்றாக்குறை ஏற்பட்டது... முதல் முறையாக ஒப்புக்கொண்ட விளாடிமிர் புடின்
உக்ரைனால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் காரணமாக நாடு எரிபொருள் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளானதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தகுந்த பதிலடி
பிப்ரவரி 2022-ல் தொடங்கிய தாக்குதலுக்குப் பிறகு, உக்ரேனிய பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, இந்தத் தாக்குதல்கள் ஒரு தகுந்த பதிலடி என்றே உக்ரைன் கூறுகிறது.

பொதுவாக முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும், குறிப்பாக எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களைப் பொறுத்தவரை, நமது உள்கட்டமைப்பு வசதிகள் மீதான இத்தாக்குதல்கள் சிக்கல்களை உருவாக்குகின்றன என்பது வெளிப்படையான ஒன்று என ஞாயிறன்று வெளியாகியுள்ள நேர்காணலில் புடின் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ஒருவித பற்றாக்குறை நிலவுகிறது, ஆனால் அது தீவிரமானதல்ல என்றும் புடின் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் வான்வழித் தற்காப்புத் திறனை அதிகரிப்பதும், குறிப்பாக கிரிமியாவுக்கு எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதும் தற்போது முக்கியப் பணியாக உள்ளது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலை
இதனிடையே, உக்ரைனின் தாக்குதல்களால் விநியோகம் மற்றும் எண்ணெய் நிலையங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரீமியாவின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று அவசர நிலையை அறிவித்தனர்.

கடந்த 2014-இல் உக்ரைனிடமிருந்து அந்தப் பகுதியை ரஷ்யா வலுக்கட்டாயமாக தன்வசப்படுத்தியது; இச்செயலை பெரும்பாலான நாடுகள் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |