புடினுக்கும் எலான் மஸ்குக்கும் இடையில் தொடர்பு என வெளியான தகவலால் பரபரப்பு
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும், உலக கோடீஸ்வரர் எலான் மஸ்குக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விடயம், பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
புடினுக்கும் எலான் மஸ்குக்கும் இடையில் தொடர்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் கோடீஸ்வரர் எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டு முதலே, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், எலான் மஸ்கும் புடினும் தனிப்பட்ட விடயங்கள் முதல் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திவரும் விடயங்கள் வரை விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு ஆதரவாக, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட்டை தைவானுக்கு மேல் செயல்பட விடவேண்டாம் என புடின், எலான் மஸ்கிடம் கேட்டுகொண்டதாக அந்த பத்திரிகை தெரிவிக்கிறது.
ரஷ்ய உக்ரைன் போருக்கு மத்தியில், எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்புக்கு ஆதரவாக அதிக அளவில் பணத்தை செலவிட்டுவரும் நேரத்தில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டுகள்
ஏற்கனவே, ரஷ்ய உக்ரைன் போருக்கு நடுவே, ஸ்ட்ராலிங்க் டெர்மினல்களை எலான் மஸ்க் ரஷ்யாவுக்கு விற்க இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவற்றை எலான் மஸ்க் மறுத்தாலும், ஒருவேளை அவை உண்மையாக இருக்குமானால், அதனால் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
அதாவது, எலான் மஸ்கின் நிறுவனங்கள், அமெரிக்க ராணுவத்துடன் தொழில்முறை தொடர்பு வைத்துள்ள நிலையில், அவரால் முக்கியமான ராணுவ ரகசியங்களை அணுகமுடியும் என்பதால், அவரும் புடினும் தொடர்பிலிருக்கும் விடயம், தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |