விளாடிமிர் புடினின் நிலை... இதுவரையான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக, இதுவரையான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர்.
அமெரிக்காவின் கொலராடோவில் நடந்த சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ், விளாடிமிர் புடின் தொடர்பில் தாம் கூறும் கருத்துகள் அனைத்தும், தமது தனிப்பட்ட கருத்துகள் எனவும், அமெரிக்க உளவுத்துறைக்கு தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா சார்பில் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்துக்கொண்ட கடைசி நபர் என்ற முறையில், அவரது உடல் நிலை தொடர்பில் தம்மால் உறுதிபட கூற முடியும் எனவும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் விளாடிமிர் புடின் தொடர்பில் வெளியாகும் காணொளிகள் மற்றும் தகவல்களில், புடின் புற்றுநோயால் அவதிப்படுகிறார், அல்லது பார்கின்சன் போன்ற நோயால் அவதிப்படுகிறார் என வதந்திகள் உலவவிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொதுவெளியில் தோன்றும் காட்சிகளில் அவரது உடல்மொழி வித்தியாசமாக காட்டப்பட்டது. கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அவரது உடல் கட்டுப்படுத்த முடியாதபடி நடுங்கியதாகவும், அடிக்கடி காணாமல் போகிறார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் புடின் தொடர்பில் வெளியான அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானது என்றே ரஷ்யா கூறிவந்தது. தற்போது அதே கருத்தையே, அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
புடினின் தற்போதைய மனநிலை தான் உக்ரைனில் இதுவரை வெளிப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள வில்லியம் பர்ன்ஸ், தனிப்பட்ட முறையில் உக்ரைனை ஒரு நாடாக விளாடிமிர் புடின் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனாலையே, உக்ரைன் தலைநகரை ஒரே வாரத்தில் ரஷ்யா கைப்பற்றும் என விளாடிமிர் புடின் சூளுரைத்தார் எனவும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் கூட்டாக களமிறங்கும் என விளாடிமிர் புடின் கணிக்க தவறிவிட்டார் எனவும், உக்ரைன் மீதான படையெடுப்பு மாதங்கள் நீளலாம் என்பதையும் புடின் கணிக்க தவறிவிட்டார் என வில்லியம் பர்ன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.