விளாடிமிர் புடினுக்கு உண்மை தெரியவில்லை: மூடிமறைக்கும் அதிகாரிகளால் திணறும் ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் மீதான அச்சம் காரணமாக ஆலோசகர் தரப்பு உண்மையை மூடி மறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தவறாக வழிநடத்தப்படுவதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்கள் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உத்தரவுகளை நிறைவேற்ற மறுப்பதாகவும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்ய பொருளாதாரத்தில் உக்ரைன் தொடர்பான பொருளாதாரத் தடைகளின் முழு தாக்கம் குறித்தும் புடினுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆலோசகர்கள் கள நிலவரத்தை வெளிப்படையாக கூற அச்சப்படுவதால், இராணுவ அதிகாரிகளுக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
உண்மையை புடினிடம் இருந்து மூடி மறைத்ததன் விளைவாகவே, இதுவரையான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டவில்லை எனவும் நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், சர்வல்லமை பொருந்திய ஒரு தலைவர், கெட்ட செய்தி வந்தால் எப்படி நடந்து கொள்வார் என்பது தெரியவும் வாய்ப்பில்லை என்றே பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட சில பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தலைநகர் கீவ்வில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கிழக்கு பிராந்தியங்களில் கவனம் செலுத்துவதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யா கிய்வில் இருந்து படைகளை வெளியேற்றி வருவதகாவும் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.