உக்ரைன் மீது ரஷ்யா எப்போது தாக்குதலை தொடங்கும்? நேச நாடுகளிடம் திகதியை வெளிப்படையாக கூறிய ஜோ பைடன்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் நாள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேச நாடுகளிடம் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலராயில் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உட்பட பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், இன்று காணொலி காட்சி மூலம் நேச நாடுகளுடன் நடந்த உரையாடலின் போது, எதிர்வரும் பிப்ரவரி 16ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகமான Politico செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 16ல் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கும் என பல அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக Politico குறிப்பிட்டுள்ளது.
அது ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் சைபர் தாக்குதலாக இருக்கக்கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாம்.
மேலும், சைபர் தாக்குதல் உடனடியாக நடத்தப்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக Politico குறிப்பிட்டுள்ளது.