ரகசியங்களைக் காப்பவர் என அறியப்பட்டவர்... புடினால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மர்ம மரணம்
விளாடிமிர் புடினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு உயர்மட்ட ரஷ்ய இராணுவத் தளபதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று திடீரென மரணமடைந்துள்ளார்.
இதய நோய் காரணமாக
உக்ரைனில் பிறந்த 56 வயதான தளபதி Yuri Sadovenko என்பவர் விளாடிமிர் புடினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில், தற்போது ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், இதய நோய் காரணமாக சடோவென்கோ திடீரென்று மரணமடைந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல் ஏதும் முன்னர் வெளியாகியிருக்கவில்லை. சடோவென்கோ முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் நெருக்கமாக இருந்தவர்.
மட்டுமின்றி, அவரின் நம்பிக்கைக்குரியவர் என்றும் அறியப்பட்டவர். உக்ரைன் போரின் ஆரம்பத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தில் அவர் ஒரு ரகசியங்களைக் காப்பவராக பரவலாகக் கருதப்பட்டார்.

விளக்கமளிக்கப்படாத மரணங்கள்
இந்த நிலையில், 2024 மே மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடந்த அதிரடி பதவி பறிப்பு நடவடிக்கையில் அமைச்சர் ஷோய்குவை நீக்கியதை அடுத்து சடோவென்கோவையும் புடின் பணிநீக்கம் செய்தார்.
பிரித்தானியா மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்டவர் இந்த சடோவென்கோ. வெறும் 56 வயதில் மரணமடைந்த சடோவென்கோ, பிப்ரவரி 2022-ல் போர் தொடங்குவதற்குச் சற்று முன்பிருந்து ரஷ்யாவின் உயர்மட்டத்தினரிடையே நிகழும் திடீர் மற்றும் விளக்கமளிக்கப்படாத மரணங்களின் அதிகரித்து வரும் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஆனால், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் இந்த சடோவென்கோ. இவரது மனைவி 42 வயதான Maria Kitaeva புடின் அமைச்சரவையில் மற்றொரு துணை பாதுகாப்பு அமைச்சரான திமூர் இவனோவ் என்பவரை காதலித்து, அவருடன் சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இவனோ பின்னர் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |