திடீர் திருப்பம்! முதல் முறையாக புடின் வாயில் இருந்து வந்த முக்கிய வார்த்தை... கை குலுக்க தயாராகும் ரஷ்யா - உக்ரைன்?
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
கடந்த 24-ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. 16 நாட்களாக இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நீடிக்கிறது. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சூழலில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ்கென்கோ நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசித்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது புடின் சிலமுக்கிய தகவல்களை பெலாரஸ் அதிபருடன் பகிர்ந்து கொண்டார்.
ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழுவிவரங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன் என்று பெலாரஸ் அதிபரிடம் புடின் கூறியுள்ளார். ரஷ்ய ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
புடின் பேச்சுவார்த்தை குறித்து பாசிட்டிவ் கருத்துகளைக் கூறுவது இதுவே முதல்முறையாகும்.
இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் பகிரங்கமாக கூறியிருப்பதால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.